” உள்நோக்கத்தோடு செயல்படும் தேர்தல் ஆணையம் ” ஸ்டாலின் வேண்டுகோள் ….!!

எடப்பாடி ஆட்சியை காப்பாற்ற தேர்தல் ஆணையம் உள்நோக்கத்தோடு செயல்படுவதாக முக.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

இன்று திமுகவின் தலைமை அலுவலகத்தில் திமுகவின் மாவட்ட செயலாளர் , சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் M.P_க்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் , திருப்பரங்குன்றம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டுமென்று திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவிக்கையில் , நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்பிக்கள் கூட்டத்தில் திருப்பரங்குன்றம் , ஓட்டப்பிடாரம் , அரவக்குறிச்சி தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் . திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபை ஊராட்சி வழியாக நாங்கள் ஏற்கனவே பிரச்சாரங்களை தொடங்கியிருக்கிறோம் . 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி 40_க்கு 40 வெற்றி பெற்றதைப் போல இந்தத் தேர்தலிலும் உறுதியாக வெற்றிபெற இருக்கின்றோம்.

தமிழகத்தில் 21 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலையில் மூன்று தொகுதிகளை தவிர்த்து 18 தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கிறது . இதில் உள்நோக்கம் இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது . தேர்தல் ஆணையம் எடப்பாடி ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இடைத் தேர்தலை நடத்தாமல் உள்நோக்கத்தோடு செயல்படுகின்றது. திமுக சார்பில் தலைமை தேர்தல் ஆணையரை இன்றோ அல்லது நாளையோ சந்தித்து எங்களுடைய கோரிக்கையை மனுவாக வழங்க இருக்கிறோம் . நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் . இல்லை என்று சொன்னால் நாங்கள் உயர்நீதிமன்றத்தை அல்லது தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார் .