நிதின் கட்கரியை ஏன் எடப்பாடி தடுக்கவில்லை…. ஸ்டாலின் கேள்வி?

நிதின் கட்கரி 8  வழி  சாலை அமல்படுத்துவோம் என கூறியபோது தமிழக  முதலமைச்சர் தடுக்காதது ஏன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் திமுக சார்பில்  ஸ்ரீபெரும்பதூர் தொகுதியில் போட்டியிடும்  திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின் , மோடி குஜராத் மாநிலத்தை மிக சிறந்த மாநிலமாக மாற்றியதாக பொய்யான பிம்பத்தை உருவாக்கி , மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்தார். அவர்  அளித்த வாக்குறுதிகளை பின்பற்றவில்லை. காங்கிரஸ் ஆட்சி அமைத்த உடனே சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும்  என்று முக.ஸ்டாலின் வாக்குறுதியளித்தார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், தமிழக மறைந்த முதலமைச்சராக கருணாநிதி இருந்தவரை தமிழகத்திற்குள் நீட்தேர்வினை அனுமதிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியும் , பன்னீர்செல்வமும்  ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் நீட் தேர்வினை அமல்படுத்தினார்கள்  என்று விமர்சித்தார். மேலும் 8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்துவோம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறும்போது எடப்பாடி ஏன் அவரை தடுக்கவில்லை என்று முக. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.