மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு பூஜை, அலங்காரங்கள் நடைபெற்றது.
தஞ்சையில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பெருவுடையார் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள நந்தி பெருமானுக்கு மாட்டுப்பொங்கல் மகரசங்கராந்தி பெரு விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் 12 அடி உயரமும், 19 1/2 அடி நீளமும், 13 1/4 அடி அகலமும் கொண்ட நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், பாகற்காய், சவ்சவ், பரங்கிக்காய், பூசணிக்காய் உள்ளிட்ட காய்களாலும், வாழை பழம், ஆப்பிள் அன்னாசி, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழ வகைகளாலும், இனிப்புகளாலும் செவ்வந்தி ரோஜா உள்ளிட்ட மலர்களாலும் நந்தி பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
இவற்றின் மொத்த எடை ஏறத்தாழ 200 கிலோ இருக்கும் என்று கோவில் நிர்வாகிகள் சார்பில் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நந்தி பெருமான் சன்னதிக்கு எதிரே வைத்து கோ பூஜை நடந்தது. மேலும் கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு மகரசங்கராந்தி விழா எளிமையாக கொண்டாடப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.