இதை பற்றி தான் பேச போறாங்களா…? பிரதமருடன் முக்கிய ஆலோசனை கூட்டம்…. அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்பு…!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் திரு.நரேந்திரமோடி வரும் 8ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது. முதன்முறையாக பாதிப்பு எண்ணிக்கை இன்று ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இதன்படி 1 லட்சத்து 3 ஆயிரத்து 558 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 52 ஆயிரத்து 247 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 478 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை 8 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி வரும் 8ஆம் தேதி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார்.

அப்போது கொரோனா தடுப்பூசி சார்ந்த விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்நிலையில் மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இதில் தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இதனிடையே பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில் புதிதாக கொரோனா தடுப்பூசி மையம் அமைப்பதற்கான நிபந்தனைகளில் தளர்வு ஏற்படுத்தி தருவதோடு, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் வயது வரம்பில் மாற்றம் செய்துகொள்ள அனுமதி தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.