கிருஷ்ணகிரியில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் குழாய் பொருத்திய பானைகள் மற்றும் மண் குவளைகளை மக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.
தமிழகத்தின் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் தாண்டியுள்ளது. இந்த வெயில் தாக்கத்தினால் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த வெப்பத்திலிருந்து தப்பிக்க இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், மோர் உள்ளிட்டவற்றை மக்கள் அருந்தி வருகின்றனர்.
சுட்டெரிக்கும் வெப்பத்தின் தாக்கம் அளவுக்கு அதிகமாக இருப்பதால், கிருஷ்ணகிரியில் கம்மங்கூழ், ஜிகிர்தண்டா, மோர் உள்ளிட்ட வெப்பம் தணிக்கும் நீர் ஆதாரங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. வெயில் கொடுமையை தணிக்க தள்ளு வண்டியில் வியாபாரிகள் விற்பனை செய்யும் கம்மங்கூழ், மோர் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி பருகி வருகின்றனர். ஒரு குவளை மோர் 5 ரூபாய்க்கும், ஜிகிர்தண்டா 10 ரூபாய்க்கும் வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். வெயிலில் இருந்து தப்பிக்க குடிநீரை இயற்கையான முறையில் குளிர்ந்த நீராக மாற்றும் மண்பானைகள் இந்த காலத்திற்கு ஏற்ற வகையில் குழாய் பதித்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்த வகை மண் பானைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வீடுகளுக்கு வாங்கி செல்கின்றனர்.