கொரோனா வைரஸால் தமிழகத்தில் சிறு, குறு விற்பனைகள் பாதிக்கப்படவில்லை – முதல்வர் பழனிசாமி விளக்கம்!

கொரோனா தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். கொரோனா வைரஸால் சிறு, குறு நடுத்தர தொழில்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் பல நாடுகள் பொருளாதார இழப்பீடு வழங்குகின்றன என்றும் பேரவையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி கொரோனா வைரஸால் சிறு, குறு விற்பனைகள் பாதிக்கப்படவில்லை என கூறியுள்ளார். தமிழகத்தில் சிறு, குறு விற்பனைகள் நிலையங்கள் எதுவும் மூடவில்லை. தொழிலார்கள் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார்கள் என்பதால் யாரும் அச்சப்பட தேவையில்லை என முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும் இத்தாலியில் கொரோனா வெகுவாக பரவியுள்ளதால் அங்கு அவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து யாருக்கும் கொரோனா பரவவில்லை என்றும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களால் தான் கொரோனா வைரஸ் பரவுகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் இந்த வைரஸால் இதுவரை இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.