திண்டுக்கல்லில் வாகன சோதனை என்கிற பெயரில் பொய் வழக்கு பதிவு செய்தும், துப்பாக்கி காட்டி மிரட்டியும் வந்த SIயை கண்டித்து ஊர் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் நத்தம் அருகே செந்துறையில் காவல்துறை அதிகாரிகள் கடந்தவாரம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மூன்று இளைஞர்களை வழி மறித்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். சோதனையின்போது SI மாதவராஜ்க்கும் இளைஞர்கள் மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த இடத்தில் கடை நடத்தி வந்த குமரன், அவ்வழியாக மினி சரக்கு லாரியில் சென்றவர்கள் இறங்கி இளைஞர்கள் மூன்று பேருக்கும் ஆதரவாக பேசியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து வாக்குவாதம் முற்றி இளைஞர்களை மாதவராஜ் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேர், அவர்களுக்கு ஆதரவாக பேசிய நான்கு பேர் என மொத்தம் 7 பேர் மீதும் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இதையடுத்து ஊர் தலைவர்கள் சிலபேர் நத்தம் காவல் நிலையத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்யப்பட்ட இளைஞர்களை கைது செய்ய வேண்டாம் என்றும் தாங்களே இன்று காவல் நிலையத்தில் அவர்களை ஒப்படைத்ததாகவும் உறுதியளித்து விட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட இளைஞர்களில் ஒருவரன குமரன் வீட்டிற்கு நேற்று இரவு ஒரு மணி அளவில் SI மாதவராஜ் சென்றதாகவும், குமரனை துப்பாக்கியை காட்டி அடித்து இழுத்து சென்றதாகவும், அவரை தடுக்க முயன்ற குமரனின் தந்தையையும் துப்பாக்கியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து நள்ளிரவு வீட்டின் கதவைத் தட்டி துப்பாக்கி முனையில் இளைஞரை SI அழைத்துச் சென்றதாக குற்றம் சாட்டி இருக்கும் மக்கள் இதை கண்டித்து சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலால் நத்தம் சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் டிஎஸ்பி பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. வாகன தணிக்கை என்ற பெயரில் தொடர்ந்து பொய் வழக்குகளை SI மாதவராஜ் பதிவு செய்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து இருக்கிறார்கள்.