ஆக்கிரமிப்பு இடம் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள சாலை மற்றும் தெருக்கள் ஓரம் கடைகளின் உரிமையாளர்கள் பொது இடத்தை ஆக்கிரமித்து இருப்பது தெரிய வந்தது. எனவே அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகத்திற்கு கோட்டாட்சியர் உத்தரவிட்டார். அதன்படி நகராட்சிக்குட்பட்ட ஆக்கிரமிப்புகளை கடை உரிமையாளர்கள் உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், அவ்வாறு செய்யவில்லை என்றால் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மேலும் அகற்றப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு அதற்கான செலவின தொகை அந்த கடை உரிமையாளர்களுக்கு விதிக்கப்பட்ட வரி விதிப்பில் சேர்த்து வசூல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.