ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இன்னும் 300 சாட்சிகளை விசாரிக்க வேண்டியுள்ளது என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018_ஆம் ஆண்டு மே 22_ஆம் தேதி அங்குள்ள பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தியது கலவரமாக மாறி போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது.தமிழக அரசின் உத்தரவை இரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு விசாரித்து வருகின்றது.இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. நேற்று நடந்த இதன் விசாரணையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் நிலை, சி.பி.ஐ. விசாரணையின் நிலை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.பின்னர் இந்த வழக்கு விசாரணை இன்று வந்த போது அதில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பாக இன்னும் 300 சாட்சிகளை விசாரிக்க வேண்டியுள்ளது. அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் 365 சாட்சியங்களை விசாரித்துள்ளது என்று தமிழக அரசு பதிலளித்துள்ளது.