தண்ணீர் தட்டுப்பாட்டால் அரைநாள் மட்டுமே நடத்தப்படும் பள்ளி வகுப்பறைகள்…!!

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் நாள்தோறும் அரைநாள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என தனியார் பள்ளியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கத்ரி எனும் தனியார் பள்ளியில் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அங்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், நகராட்சியிடம் இருந்து குடிநீர் பெற்று தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்த்து வந்தனர்.இந்நிலையில் குடிநீர் விலை அதிகரித்ததாலும், நகராட்சி பொதுமக்களுக்கு அதிகளவில் தண்ணீர் தரவேண்டியிருப்பதால், பள்ளிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை இதனால் அப்பள்ளியில்  மாணவர்களுக்கு குடிநீர் வசதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் அப்பள்ளியில் பயிலும் எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு நாள்தோறும் அரைநாள் மட்டுமே பாடம் நடத்தப்படும் என  அப்பள்ளி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இத்தகவலை அறிந்த மாவட்ட கல்வி அதிகாரி உடனடியாக பள்ளியில் ஆய்வு செய்து முன் அனுமதியின்றி இதுபோன்ற அறிவிப்பு பலகையை வைக்கக்கூடாது என்றும் மாணவர்களின் வகுப்புகளை தொடர்ந்து  நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.