சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வாக்களிக்க தேவையான வசதிகள், செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரோகினி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் 100 சதவீத வாக்குப்பதிவு_க்காக தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 50க்கும் அதிகமான பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவரும் வாக்களித்து நாட்டின் ஜனநாயகத்தை காப்போம், ஜனநாயகத்தை நிலை நிறுத்துவோம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை உயர்த்தி சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் , மாற்றுத்திறனாளிகள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் , சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வாக்களிக்கும் வகையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று கூறினார்.