கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் – மத்திய அரசு அறிவிப்பு!

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது.

இந்தியாவை பொருத்தவரை டெல்லி, கேரளா, கா்நாடகா, மகாராஷ்டிரம் உள்பட 11 மாநிலங்களில் இதுவரை 85 பேருக்கு இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவர் உட்பட 2 பேர் கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அத்திலிருந்து தற்காத்து கொள்ளும் வகையில் கொரோனா வைரஸை மத்திய அரசு இயற்கை பேரிடராக அறிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவுகளை மாநில அரசே நிர்ணயிக்கும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாநில பேரிடர் அமைப்பின் மூலம் தேவையான நிதி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.