ரூ.3,47,00,000 அரசுப் பஸ்ஸில் கேட்பாரற்றுக் கிடந்தது……!!

அரூர் அருகே அரசு பேருந்தில் கேட்பாரற்று கிடந்த 3 கோடியே 47 லட்சம் ரூபாயை  பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலையில் இருந்து தருமபுரி நோக்கி புறப்பட்டு சென்ற அரசு பேருந்தை பையர்நாயக்கன்பட்டி அருகே சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.அப்போது அந்த பேருந்தில் 7 பைகள் கேட்பாரற்று கிடந்ததால் அது குறித்து விசாரணை ‌நடத்தப்பட்டது. யாரும் உரிமைக்கோராத அந்த பைகளை திறந்து பார்த்த போது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததைக் கண்டு தேர்தல் பறக்கும் படையினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த பையில் இருந்த மொத்தம், 3 கோடியே 47 லட்சத்து 51ஆயிரத்து 100 ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேருந்து ஓட்டுநர், நடத்துநரிடம் நடத்தப்பட்ட‌ விசாரணையில், போக்குவரத்துக்கழக ஊழியர் செல்வராஜ் அந்த பைகளுடன் பேருந்தில் ஏறியதாக கூறினர். அதனையடுத்து செல்வராஜிடம் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் ‌வருமான வரித்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பேருந்தில் பணம் கொண்டுவரப்பட்ட பையில் இருந்து ஒரு அடையாள அட்டையும், வங்கி கணக்கு புத்தகமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவை திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமேஷ் என்பவருடையது என்று தெரியவந்துள்ளது. மேலும், போக்குவரத்துக்கழக ஊழியர் செல்வராஜும் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.