ரூ.3000… உச்சத்தை எட்டிய மல்லிகைப்பூ விலை… பின்னணி என்ன..?

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூவின் விலை ரூபாய் மூவாயிரம் என உயர்ந்து கடந்த 10 நாட்களில் மட்டும் 10 மடங்கு உயர்வை எட்டியுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் விளையும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு மொத்த மற்றும் சில்லரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூழலில் தொடர் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்கழி மாதம் மற்றும் கிறிஸ்துமஸ் ஆகிய விழா காலத்தில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

மல்லிகை பூவின் விலை இயல்பான நாட்களை விட 10 மடங்கு உயர்ந்து கிலோவுக்கு 3000 விற்பனை செய்கிறது. ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து வரக்கூடிய பூக்களும் தொடர் மழை காரணமாக வராத காரணத்தினால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 80 முதல் 90 டன் வரை பூக்கள் வரத்து குறைந்து தற்போது 50 டன் மட்டுமே வரத்து இருக்கின்றது.

இதனால் கனகாம்பரம் கிலோ 1,800 ரூபாய்க்கும், பிச்சிப்பூ கிலோ 800 ரூபாய்க்கும், முல்லை கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், செவ்வந்தி கிலோ 200 ரூபாய்க்கும், அரளிப்பூ கிலோ 300 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் கிலோ 120 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயல்பான நாட்களில் மல்லிகை கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது பத்து மடங்கு விலை உயர்வு அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.