நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் நகர் மன்ற சாதாரண கூட்டம் நேற்று காலை நகராட்சி மன்ற கூட்டத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைவர் விஜய் கண்ணன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் ஆணையாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் திமுக கவுன்சிலர் தர்மராஜ் கூறியதாவது, அம்மன் நகர் பகுதியில் எம்எல்ஏ நிதியிலிருந்து தார்சாலை அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ஆணையாளர் ராஜேந்திரன் பதில் அளித்துள்ளார். அதாவது தற்போது ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் அதிமுக நகர செயலாளரும் கவுன்சிலருமான பாலசுப்பிரமணியன் அம்மன் நகரில் ரோடு அமைப்பது பற்றி தங்கமணி எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுப்போம் என கூறியுள்ளார். நகராட்சி துணைத் தலைவர் வெங்கடேஷ் இதற்கு பதில் அளித்த போது, தன்னுடைய வார்டில் உப்பு தண்ணீர் டேங்க் அமைக்க எட்டு மாதத்திற்கு முன்பு டெண்டர் விடப்பட்டது. ஆனால் இப்போது வரை வேலை நிறைவடையவில்லை. அதனால் பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அதிமுக கவுன்சிலர் எஸ் என் பழனிச்சாமி நகராட்சிக்கு வர வேண்டிய வரை முழுமையாக வசூலிக்கப்பட்டு விட்டதா என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்த ஆணையாளர் ராஜேந்திரன் கூறியதாவது, சொத்துவரி ரூ.63 இலட்சமும், தொழில் வரி ரூ.1 லட்சம், குடிநீர் வரி ரூ.45 லட்சமும், குப்பை வரி ரூ.30 லட்சம் உட்பட மொத்தம் ரூ.1 கோடியே 68 லட்சம் வர வேண்டி உள்ளது. மேலும் கடைகளுக்கான வரி 100 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் 133 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.