ஸ்டீவ் ஸ்மித் அதிரடியில் மும்பையை வீழ்த்திய ராஜஸ்தான்…!!

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 

ஐ.பி.எல் 36 வது லீக் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் அணியும்,  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது . இப்போட்டி ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. ராஜஸ்தான் அணியில் ரஹானேவுக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதில் டாஸ் வென்ற  ராஜஸ்தான்  அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்  பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 161 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக குயிண்டன் டிகாக் 65 (47) ரன்களும், சூர்ய குமார் யாதவ் 33 ரன்களும், ஹர்திக் பாண்டியா 23 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயஸ் கோபால் 2 விக்கெட்டுகளும், ஸ்டூவர்ட் பின்னி, ஜோப்ரா ஆர்ச்சர், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர்  தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அஜிங்கியா ரஹானேவும், சஞ்சு சாம்சனும் களமிறங்கினர். ரஹானே 12 ரன்னில் ஏமாற்றமளித்தாலும் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 35 (19) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  அதன் பிறகு கேப்டன்  ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ரியான் பராக் இணைந்து சிறப்பாக செயல்பட்டனர்.

அதன் பின் கடைசி கட்டத்தில் ரியான் பராக் 43 (29) ரன்களில்  ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஸ்டீவ் ஸ்மித் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியை தேடி தந்தார். இறுதியில் 19.1 ஓவரில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழந்து  162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்மித் 59* (48) ரன்களிலும், ஸ்டூவர்ட் பின்னி 7* ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.