தமிழகம் மற்றும் புதுவையில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய்ய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , வளிமண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டிருக்கும் காற்றின் சங்கமத்தின் காரணமாக வட தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு நாளுக்கு லேசான முதல் மிதமான மழைக்கும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 13 சென்டி மீட்டரும், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 8 சென்டி மீட்டர் மழையும், பெரம்பலூரில் 7 சென்டி மீட்டரும் , ஊத்தங்கரை , பையூர் , போச்சம்பள்ளியில் 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
வேலூர், கிருஷ்ணகிரி , அரியலூர் , தஞ்சாவூர், திருவாரூர் , நாகப்பட்டினத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலை, தருமபுரி , சேலம் , பெரம்பலூர் திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும்.நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.ஜூன் 1முதல் இன்றைய தினம் வரை தமிழகத்தில் இதுவரை 18 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சென்னை பொருத்தவரை 33 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.இது இயல்பை விட 5 சென்டிமீட்டர் அதிகம் ஆகும் என்று அவர் தெரிவித்தார்.