தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ,சென்னையை பொறுத்த வரை கடந்த 24 மணி நேரத்தில் சோழவரம் திருவாலங்காடு 13 சென்டிமீட்டர் மழையும் , திருத்தணி 12 சென்டிமீட்டர் மழையும் , எண்ணூர் , ஆர். கே பேட் , பள்ளிப்பட்டு 11 சென்டிமீட்டர் மழையும் , சென்னை நுங்கம்பாக்கம் 10 சென்டிமீட்டர் மழையும் , மீனம்பாக்கம் 9 சென்டிமீட்டர் மழையும் , குறிப்பாக சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.

தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வடபகுதியில் வளிமண்டலத்தின் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் அனேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது.கன மழையை பொறுத்த வரை 24 மணி நேரத்தை பொறுத்த வரை வட தமிழக பகுதிகளில் திருவள்ளூரில் 22 சென்டிமீட்டர் மழையும், பூண்டியில் 20 சென்டிமீட்டர் மழையும், அரக்கோணத்தில் 17 சென்டிமீட்டர் மழையும், தாமரை பாக்கத்தில் 15 சென்டிமீட்டர் என்ற அளவில் மழை பெய்துள்ளது.
அடுத்த வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.திருவள்ளூர் , வேலூர், கிருஷ்ணகிரி , தர்மபுரி , விழுப்புரம் , திருவண்ணாமலை , காஞ்சிபுரம் , திருப்பூர் , தேனி , திண்டுக்கல், திருச்சி , பெரம்பலூர் , அரியலூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொருத்தவரையில் இடைவெளிவிட்டு சிலமுறை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.மீனவர்களுக்கான எச்சரிக்கை பொருத்தவரையில் மீனவர்கள் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த இரு தினங்களும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.இந்த அறிவிப்பு மூன்று நாட்களுக்கு தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.