காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு மற்றும் ஆளுமை வாக்காளர்களை கவரவில்லை என்று சிவசேனா விமர்சித்துள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான படு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் காங்கிரஸ் கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற தோல்வியை விட மிக மோசமான தோல்வியை இம்முறை சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு காரணம், ராகுல் காந்தியின் பேச்சு மற்றும் ஆளுமை வாக்காளர்களைக் கவரவில்லை என்பதே ஆகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், ராகுல் யாருக்கும் முன்மாதிரியாக விளங்கவில்லை என்றும், காங்கிரஸ் தனது கட்சி தொண்டர்களை சிறிது சிறிதாக இழந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. கிழக்கு உத்தர பிரதேசத்தின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். ஆனால் அதன் பிறகும் எந்த ஒரு மாற்றமும் நிகழவில்லை. கடந்த தேர்தலை விட இம்முறை ஒரு தொகுதி குறைவாக தான் காங்கிரஸ் வென்றுள்ளது என அந்த தலையங்கத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது.