சிறுவனின் ஆசையை நிறைவேற்றும் ராகுல்……!!

ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேச வேண்டுமென்று ஆசை கொண்ட 7 வயது கேரள சிறுவனின் எண்ணத்தை நிறைவேற்ற ராகுல் காந்தி தயாராகியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலுள்ள அமேதி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்‌ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. இம்முறை அமேதி தொகுதியுடன் சேர்த்து கேரளா வயநாடு மக்களவை தொகுதியிலும் போட்டியிடுகிறார். அதற்காக கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து தொடர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி.

இந்நிலையில் கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை  தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் பங்கேற்றார். அதில் நந்தன் என்ற 7 வயது சிறுவன், ராகுல் காந்தியின் புகைப்படத்தை தனது சட்டையில் ஏந்தியவாறு அவரை காண காத்திருந்தார். பலத்த பாதுகாப்பில் அந்த சிறுவனால் ராகுலை சந்திக்க முடியவில்லை. இதுகுறித்து தமது வயநாடு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, சிறுவன் நந்தனின் ஏக்கத்தை தாம் அறிந்ததாகவும், விரைவில் சிறுவனை நேரில் சந்தித்து ஆசையை நிறைவேற்ற உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.