பாறை இடுக்குகளில் சிக்கிய 2 பேரை மீட்புக்குழுவினர் சடலமாக மீட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கல்குவாரி அமைந்துள்ளது. இங்கு ராட்சச பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொக்லைன் மற்றும் லாரி ஓட்டுனர்களான செல்வகுமார், ராஜேந்திரன், செல்வம், முருகன், விஜய், மற்றொரு முருகன் ஆகிய 6 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அதில் 4 பேரை மீட்டதில் செல்வம், முருகன் ஆகிய 2 பேர் இறந்து விட்டனர்.
இதனையடுத்து மற்ற 2 பேரையும் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று உள்ளது. அதில் பாறைகளுக்கு நடுவில் சிக்கி இருக்கும் 5-வது நபரை மீட்புக்குழுவினர் மீட்க முயற்சி செய்தனர். இந்த மீட்பு பணி இரவு வரை நீடித்ததை தொடர்ந்து நள்ளிரவில் பாறைகள் மீண்டும் சரிந்து விழுந்ததால் மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ள 6-வது நபர் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க மோப்ப நாயை காவல்துறையினர் களமிறங்கினர்.
இந்நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கிய 2 பேரின் உடல்களை மீட்பதற்காக மீட்புக்குழுவினர் கடப்பாறையை கொண்டு நகத்த முயன்றுள்ளனர். ஆனால் முடியவில்லை. இதனையடுத்து அவர்கள் அடுத்தகட்ட முயற்சியாக பாறையில் டிரில்லர் எந்திரம் கொண்டு 10 இடங்களில் லேசாக துளையிட்டு அதில் தலா 120 கிராம் எடை கொண்ட ஜெலட்டின் குச்சிகளை வெடியாக செலுத்தி நகர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பயங்கர சத்தத்துடன் வெடித்து பல துண்டுகளாக சிதறியதை தொடர்ந்து மீட்பு குழுவினர் கற்களை அகற்றி இடிபாடுகளுக்குள் சிக்கிய 5-ஆவது நபரின் உடலை மீட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து 6-வது நபரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த மீட்பு பணிகளை காலை முதலே மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சென்று பார்வை இட்டுள்ளார். மேலும் சம்பவ இடத்திற்கு பொதுமக்கள் யாரும் வராத அளவிற்கு காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.