மும்பை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் அணி….!!

பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. 

12 ஐ.பி.எல் திருவிழாவின் 9-ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடியது. இவ்விரு அணிகளுக்கிடேயேயான  போட்டி   பஞ்சாப்பில் உள்ள மொகாலி ஸ்டேடியத்தில்  மாலை 4 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பீல்டிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மாவும், டி காக்கும் களமிறங்கினர். இருவரும் சிறப்பான விளையாடி முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்த நிலையில் ரோஹித் 18 பந்துகளில் 32 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து வந்த சூர்யகுமார் குமார் யாதவ் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய டிகாக் 60 (39)  அரைசதம் விளாசி ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த யுவராஜ் சிங் தட்டி தடுமாறி 16 (22) ரன்கள் எடுத்தார். எதிர்பார்க்கப்பட்ட பொல்லார்ட் 7 ரன்னில் ஆட்டமிழக்க,  கடைசியில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 31 (19) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.

பின்னர் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயிலும், கே.எல் ராகுலும் களமிறங்கினர். ஒருபுறம் கே.எல் ராகுல் ஆமை வேகத்தில் விளையாட மறுபுறம் கிறிஸ் கெய்ல் அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 40 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த மயங் அகர்வாலும் அதிரடியில் இறங்க ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. மயங் அகர்வால் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 40 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த டேவிட் மில்லரும் கே எல் ராகுலும் பொறுப்பாக விளையாட 18.4 ஓவரில் 177 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. கே.எல் ராகுல் 57 பந்துகளில் 71* ரன்களுடனும், டேவிட் மில்லர் 15* ( 10) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.