புல்வாமா தாக்குதல் நினைவு நாள் – ராணுவ வீரர்களுக்கு விஜய் ரசிகர்கள் வீரவணக்கம்..!!

புல்வாமா தாக்குதலின் ஓர் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், நாகர்கோவிலில் விஜய் ரசிகர்களும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.

புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு விஜய் ரசிகர்கள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய எல்லை பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, கடந்த 2019ஆம் ஆண்டு இதே நாளில் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஏராளமான ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இதையடுத்து தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ராணுவ வீரர்கள், அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகளில் உள்ளவர்கள் எனப் பலரும் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விஜய் ரசிகர் மன்றத்தினர் சார்பில் புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. குறிப்பாக, நாகர்கோவில் நகரில், இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து, பூக்கள் தூவி மரியாதை செலுத்தினர்.