நாங்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல் மக்களின் பிரச்னையை தான் எடுத்து கூறுகின்றோம் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்
திமுக தலைவர் மு க ஸ்டாலின் கிராமசபை கூட்டங்களில் மூலமாக தனது இரண்டாம் கட்ட பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், “அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்ற கருத்து அவர்களுடைய முகத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக கூறும் கருத்தாக இருக்கும். இந்தத் தேர்தலை பொறுத்தவரை எங்களின் மதசார்பற்ற கூட்டணி என்பது மிகவும் பலமான கூட்டணி. கொள்கை ரீதியான கூட்டணி. எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கின்றது.
இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் எங்களின் கூட்டணி பறைசாற்ற பட்டு இருக்கின்றது. மக்களின் பிரச்சினைகளை நாங்கள் எடுத்துக் கூறுகின்றோம். அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதும் பாரதிய ஜனதா மீதும் தனிப்பட்ட தாக்குதல்களை தொடுப்பதை விட நாங்கள் செய்வது என்னவென்றால் இந்த இரண்டு அரசுகளும் எதை செய்ய தவறியுள்ளனர்?

எதை செய்வதில் அவர்கள் வீழ்ச்சி அடைந்துள்ளார்கள்? அவர்களால் தமிழ்நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்பட்டு இருக்கிறதா அல்லது புறக்கணிக்கப்பட்டு உள்ளதா? தமிழகத்தின் உரிமைகளை எடப்பாடி பாதுகாத்து உள்ளாரா அல்லது தாரைவார்த்து உள்ளாரா? மத்திய அரசிடம் அவர் கேட்ட உதவி எவ்வளவு? இதுவரை அவர் பெற்றுள்ள உதவி எவ்வளவு? புதிய தொழிற்சாலைகள் எந்த அளவிற்கு அவரால் கொண்டுவர முடிந்தது?
விவசாய பிரச்சனை பற்றி எரிகின்ற போது அதற்கு ஆதரவாக அவர் வாக்களித்துள்ளார். இது தான் மக்கள் மனதில் இருக்குமே தவிர இவர் என்ன பேசுகிறார். இவர் என்ன உறுதிமொழி கூறுகிறார் என்பதெல்லாம் மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. எனவே கொள்கை ரீதியாக மக்களுக்கு எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை எடுத்துச் சொல்லும் ரீதியாக எங்களின் கூட்டணியின் ஒவ்வொரு அரசியல் கட்சியும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றோம். எனவே இந்தக் கூட்டணி தான் வெற்றி பெறுமே தவிர பாரதிய ஜனதா – அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி மக்களால் புறக்கணிக்கப்படும் என்கின்ற உறுதிமொழியை நான் தருகிறேன் என அவர் தெரிவித்தார்.