தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானின் ஆதரவு வேண்டும்… இலங்கையில் நடக்கும் போராட்டம்…!!!

இலங்கையில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்தின் வெளியில் மும்பை தாக்குதலை குறிப்பிட்டு தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

மும்பையில் கடந்த 2008 ஆம் வருடம் நவம்பர் 26 ஆம் தேதி அன்று தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது. பாகிஸ்தான் நாட்டில் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்பினர் இந்த தாக்குதலை மேற்கொண்டனர். அந்த தாக்குதலில் வெளிநாட்டை சேர்ந்த சிலர் உட்பட 166 பேர் பலியாகினர். தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதிகள் 9 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

இச்சம்பவம் அப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், நவம்பர் 26-ஆம் தேதியான இன்று மும்பை தீவிரவாத தாக்குதலின் நினைவு தினம். இதற்காக இலங்கையில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்தின் வெளியில் புதிய ஜனநாயக கட்சி முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

தீவிரவாதத்தை ஒழித்துக் கட்ட வேண்டும், அதற்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவிக்க வேண்டும், பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாதம் தெற்காசியா மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்பது போன்ற சில கருத்துக்களை அடிப்படையாக வைத்து இந்த போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள்.

அதற்கு பிறகு, புதிய ஜனநாயக கட்சி முன்னணியினுடைய பொதுச் செயலாளர், பாகிஸ்தான் தூதரக நிர்வாக அதிகாரியிடம் பாகிஸ்தான், தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.