நில தகராறில் முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்திலுள்ள கடவூர் பகுதியில் வசித்து வரும் துரைசாமி என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை வசந்தா என்பவருக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளார். இது சம்பந்தமான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில் துரைசாமி தனது நிலத்திற்கு வந்துள்ளார். அப்போது வசந்தா தரப்பை சேர்ந்த ஆண்டியப்பன் என்பவர் நிலத்தில் உழவு செய்ய வந்துள்ளார். இதற்கு துரைசாமி எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வசந்தா, மல்லிகா, முருகேசன் மற்றும் ஆண்டியப்பன் ஆகியோர் துரைசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபற்றி துரைசாமி தோகைமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் துரைசாமியை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.