ஆதிகால செயல்கள் குப்பையில் வீசப்பட்டுள்ளது… முத்தலாக் குறித்து பிரதமர் கருத்து..!!

முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலமாக ஆதிகால செயல்கள் குப்பையில்   வீசப்பட்டுள்ளதாக  பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா புதிய அரசு பொறுப்பேற்றதும் எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே கடந்த 25ஆம் தேதி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யபட்டது.இம்மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.

இந்நிலையில்  வாக்கெடுப்புக்கு  பின் மாநிலங்களவையில் முத்தலாக் தடை சட்டத்தை சபாநாயகர் வெங்கையா நாயுடு நிறைவேற்றினார். மேலும் குடியரசு தலைவரிடம் ஒப்புதல் வாங்கிய பின் நாடு முழுவதும் முத்தலாக் தடை சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில்,

முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் முழு இந்தியாவும் மகிழ்ச்சி அடைகிறது என்று தெரிவித்தார். மேலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஆதிகால செயல்கள் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இஸ்லாமிய பெண்களுக்கு நிகழ்ந்த அநீதி முத்தலாக் தடை சட்டம் மூலம் சரி செய்யப்பட்டுள்ளது என்றும் இஸ்லாமிய பெண்களின் வளர்ச்சிக்கும் இச்சட்டம் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.