மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி இந்திய அளவில் 350 தொகுதிகளில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதியாகியாகி விட்டது. இதனால் நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்ற நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் சிறிசேனா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பூடான் மன்னர் உட்பட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ-வும் மோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில், மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியமைக்க உள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு கனடா அரசின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கனடா மற்றும் இந்தியர்களின் வாழ்க்கை மேம்பாடு, கல்வி, வர்த்தகம், முதலீடு, சூழலியல் மாற்றம் போன்ற துறைகளில் அவருடன் இணைந்து பணியாற்றுவதற்காக காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.