சென்னையில் உள்ள பல்லாவரம்  வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் நல்லோர் வட்டம் சார்பில், ‘புதிய இந்தியா-பல வாய்ப்புகள்’ என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்கள் கேட்ட பல்வேறு வினாக்களுக்கும்  விடையளித்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர். அப்போது விமான போக்குவரத்து துறை அமைச்சர் பேசியதாவது, இந்திய நாட்டில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்பட்டு, உலக அளவில் பிற நாடுகளுக்கும் சேவை செய்யும் வகையில் தயாராகிக் கொண்டிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் உலக அளவிலான பல பிரச்சனைகளுக்கு இந்திய நாட்டை தேடி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் விமான போக்குவரத்து துறையில்  இந்திய நாடு உலகின் 2-வது உள்நாட்டு பயணம் போக்குவரத்து கொண்ட நாடாக உள்ளது. மேலும் சர்வதேச அளவில் பயணிகள் போக்குவரத்தில் 7-வது இடத்தையும் பெற்றுள்ளது. இதனையடுத்து சுதந்திரம் பெற்ற போது 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தது. ஆனால் சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது பிரதமர் மோடியின் கடந்த 8½ ஆண்டு ஆட்சி காலத்தில் 73 விமான நிலையங்கள்  புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் தற்போது வரை 147 விமான நிலையங்கள் உள்ள நிலையில், புதிதாக இந்த மாதம் 148-வது விமான நிலையத்தையும் பிரதமர் திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் தற்போதுள்ள ஆட்சியில் விமான போக்குவரத்து துறை சிறப்பாக  முன்னேற்றம் பெற்று வருகிறது.

உலக அளவில் 5% மட்டுமே பெண் விமானிகள் உள்ளனர். ஆனால் இந்தியாவில் உள்ள பெண் விமானிகள் 15 சதவீதமாக உள்ளனர். மேலும் பெண்களின் பங்களிப்பு நாட்டின் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமானது. அனைவரும் இணைந்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். இதனையடுத்து பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே.கணேஷ் நினைவுப்பரிசு ஒன்றை விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு வழங்கினார்.