கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் விழா நடைபெற்றது.
தமிழர் திருநாளான பொங்கல் விழா சேலம் மாவட்டத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் பொதுமக்கள் தங்களது வீடுகளில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டு வணங்கினர். மேலும் கொரோனா கட்டுப்பாடு காரணமாக அரசு மற்றும் தனியார் சார்பில் பொங்கல் விழா கொண்டாடுவதற்கு தடை விதிக்கபட்டிருந்ததால் கிராமப்புற மக்கள் மட்டுமல்லாது நகர்ப்புற வாசிகளும் தங்களது வீடுகளில் பொங்கல் வைத்து சூரிய பகவானை வணங்கினர்.
இதனையடுத்து உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் விழா பண்டிகை மறு நாள் கொண்டாடப்படுவது வழக்கம். எனவே ஆத்தூர், எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை குளிப்பாட்டி அதனை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அவைகளுக்கு புதிதாக வாங்கப்பட்ட மூக்கணாங்கயிறு, சலங்கை மணி உள்ளிட்டவைகளை அணிவித்து அழகுப்படுத்தினர். இதனை தொடர்ந்து மாட்டுக்கொட்டகைகளை மஞ்சள் கொத்து தோரணம் உள்ளிட்டவைகளால் அலங்கரித்து புதிய மண் பானைகளில் பொங்கலிட்டு பூஜை செய்து வணங்கினர்.