புதுச்சேரியில் உள்ளூர் இளைஞர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
புதுசேரி, வீராம்பட்டினம் கடற்கரை அருகே உள்ள அய்யம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ். இவர் அவர் வீட்டிற்கு அருகே இருக்கக்கூடிய கடற்கரை பகுதியில் வடமாநில இளைஞர்கள் சிலர் மது அருந்தியதாகவும், இதனை தினேஷ் தட்டிக் கேட்ட தாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் வடமாநில இளைஞர்களிடம் விசாரணை செய்யாமல், தினேஷை தாக்கி அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தினேஷ் மீது காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள், பெரியார் திராவிட கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அரியாங்குப்பம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். திடீரென நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு போக்குவரத்தும் பாதிப்பட்டது.