பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி…. 1 1/2 வயது ஆண் குழந்தை பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திண்ணப்பா நகரில் ஐ.டி ஊழியரான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சாய் ஆதவ்(3) சாய் மிதுன் (1 1/2) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் சாய் ஆதவ் கரூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ப்ரீகேஜி படித்து வருகிறான். நேற்று பள்ளிக்கு சென்று விட்டு சாய் ஆதவ் மாலை பள்ளி வேனில் வீட்டு வாசலில் வந்து இறங்கியுள்ளான். அப்போது வீட்டின் கதவை திறந்து சரவணன் தனது மகனை அழைத்து வருவதற்காக சென்றுள்ளார்.

அப்போது வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்த சாய் மிதுன் வெளியே ஓடி வந்து வேன் முன்பு நின்று கொண்டிருந்தான். இதனை பார்க்காத சரவணன் தனது மூத்த மகனை வேனில் இருந்து இறக்கி பின்புறமாக அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று விட்டார். மேலும் சாய் மிதுன் நிற்பதை கவனிக்காத வேன் ஓட்டுனரும் வேனை இயக்கியதால் சக்கரத்தில் சிக்கி சாய் மிதுன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இதனை பார்த்த பெற்றோர் மகனின் உடலை கண்டு கதறி அழுதனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வேன் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.