சென்னை குரோம்பேட்டையில் சுடலை ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் விருதுநகரில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுடலை ராஜன் தனது மனைவி அமிர்த பிரியா, மகன் சுடலை லோகேஸ்வரன், மாமியார் குமாரி ஆகியோருடன் காரில் சென்னையில் இருந்து வந்து கொண்டிருந்தார். அந்த காரை சுடலை ராஜன் ஓட்டி சென்றுள்ளார்.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள மலம்பட்டி விலக்கு அருகே நான்கு வழிச்சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற டிப்பர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சுடலை ராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அமிர்த பிரியா, லோகேஸ்வரன் குமாரி ஆகிய மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.