ஊர்வலத்தின் போது வெடித்து சிதறிய பட்டாசு…. சிறுவன் உள்பட 2 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சி.பள்ளிப்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வீதி உலா நடைபெற்றது. சரக்கு வாகனத்தில் அம்மன் சிலையை வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்நிலையில் ஊர்வலத்தின் போது வெடிப்பதற்காக பட்டாசுகளை வாங்கி சரக்கு வாகனத்தின் முன்புறம் வைத்துள்ளனர்.

அந்த வாகனத்தை ராகவேந்திரன்(26) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அதே ஊரில் வசிக்கும் ஆகாஷ்(7) என்ற சிறுவன் அருகில் அமர்ந்திருந்தான். இந்நிலையில் அசோகன் என்பவர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பட்டாசு மின் கம்பியில் உரசி சாமி ஊர்வலம் சென்ற சரக்கு வாகனத்தின் மேல் விழுந்தது.

இதனால் வாகனத்தில் இருந்த பட்டாசுகளும் அடுத்தடுத்து வெடித்ததால் ஆகாஷ், ராகவேந்திரா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அதே ஊரில் வசிக்கும் ஆதி(50) என்பவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆகாஷும், ராகவேந்திரனும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஆதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.