தனிமையில் அடைத்து வைத்து சித்திரவதை…. இளம்பெண்ணின் கணவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள விழப்பள்ளம் கிராமத்தில் விஜயபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா(26) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மோனிகா என்ற மகளும், மிருதேஸ்வரன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவரும், மாமியார் மனோரஞ்சிதமும் இணைந்து கொடுமைப்படுத்தியது தொடர்பாக சத்யா ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கடந்த 10- ஆம் தேதி போலீசார் இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

இதனால் கோபமடைந்த விஜயபாண்டியன், அவரது தாய் மனோரஞ்சிதம் ஆகியோர் சத்யாவை கடந்த 3 நாட்களாக தனிமையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளனர். இதுகுறித்து சத்யா மீண்டும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விஜயபாண்டியனை போலீசார் கைது செய்தனர். அவரது தாய் மனோரஞ்சிதம், தாய்மாமன் பரமசிவம், தர்மலிங்கம் உள்ளிட்ட 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.