நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்…. அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

தற்காலிக ஆசிரியர் பணியை ரத்து செய்ய பரிந்துரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் தகுதி தெரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் மனு கொடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். இதனால் கோரிக்கை மனு பதிவு செய்யப்படும் இடத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த காது கேளாத, முடியாத மாற்றுத்திறனாளிகள் 50-க்கும் மேற்பட்டோர் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், காது கேளாத, வாய் பேச முடியாதவர்கள் நலனுக்காக சைகை மொழி பெயர்ப்பாளரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களில் நியமனம் செய்ய வேண்டும் என்றும், மாத உதவி தொகையை எங்களுக்கு உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.

இதேபோன்று கம்பிளியம்பட்டியை சேர்ந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், தற்போது அரசு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால் ஏற்கனவே தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இதுவரை வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து கோட்டக்காரன்பட்டி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் ஒரு வருடமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீரை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சிவசங்கரன் மற்றும் பாப்பாபட்டி கிராம மக்கள் சார்பில் கொடுத்த மனுவில், பாப்பாபட்டியில் மயானத்துக்கு செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அதனை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மேற்கண்ட மனுக்கள் உள்பட 220 மனுக்கள் பெறப்பட்டன. மேலும் மாவட்ட ஆட்சியர் அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *