ஃப்ளோரிடாவின் ஓர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் வாயில்லா ஜீவனுக்கு நடந்த கொடூரமான சம்பவம் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அலிசன் அகதா லாரன்ஸ் என்ற பெண் தனது நாயுடன் கொலம்பியாவிற்கு செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது சரியான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் விமான நிலையத்தின் ஊழியர்கள் நாயை விமானத்தில் எடுத்துச் செல்ல முடியாது என்று கூறினர்.

இதைத் தொடர்ந்து விமான நிலையத்தில் உள்ள மகளிர் கழிப்பறையில் நாய் ஒன்று சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த விலங்கு சேவை மையத்தினர் நாய் நீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டதாக கூறினர். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் விமான நிலையத்திற்கு வந்த அலிசன் லாரன்ஸ் நாயை விமானத்தில் எடுத்து செல்ல முடியாத பட்சத்தில் நீரில் மூழ்கடித்து கொன்றதாக அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 18ம் தேதி நாயை கொலை செய்த குற்றத்திற்காக அந்தப் பெண்ணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அந்த பெண்ணுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.