அலைமோதிய கூட்டம்…. விரைவில் பயிற்சி…. அலுவலகத்தில் பரபரப்பு….!!

கலெக்டர் அலுவலகத்திற்கு தன்னார்வலர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தமிழ்நாடு வருவாய் துறை சார்பாக ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான முகாம் பாரத் நிகேதன் கல்லூரி வளாகத்தில் வருகின்ற 22-ஆம் தேதி தொடங்கி 12 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பயிற்சி பெறும் தன்னார்வலர்கள் 12 நாட்களும் முகாமில் தங்கி பயிற்சி பெற வேண்டும்.

இதனை அடுத்து பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தன்னார்வலர்களுக்கு கொரோனா பரிசோதனை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதில் 300-க்கும் அதிகமான தன்னார்வலர்கள் அலுவலகத்திற்கு வந்து குவிந்தனர். பின்னர் அவர்களின் ஆதார் எண் மற்றும் செல்போன் எண்ணை சரி பார்த்து பெயர் பதிவு செய்த பின் அனைவருக்கும் மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை செய்ததற்கான மாதிரிகள் சேகரித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பரிசோதனை முடிவில் கொரோனா பாதிப்பு இல்லாத நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் எனவும், இதில் அவர்களுக்கு பல உபகரணங்கள் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பயிற்சி முடிந்தவுடன் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். எனவே பயிற்சி பெறும் தன்னார்வலர்கள் பேரிடர் மீட்பு பணிகளின் போது தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறை போன்ற துறைகளுக்கு உதவியாக செயல்படுவார்கள்.