வேகத்தடையை அகற்ற வலியுறுத்தி…. வாகனங்களை சிறைபிடித்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி இந்த கோவில்களில் குண்டம் திருவிழா நடைபெற உள்ளதால் தமிழகம் மட்டுமின்றி ஏராளமான பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சார்பில் பண்ணாரி அருகே குயனூர் பிரிவு பகுதியில் விபத்துகளை தடுக்கும் பொருட்டு வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த வேகத்தடை மீது வெள்ளை நிற வர்ணம் பூசாமல் விட்டனர். இதனால் இரவு நேரத்தில் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகனங்கள் தட்டு தடுமாறி செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலுக்கு மனைவியுடன் சென்ற நபர் வேகத்தடை அருகே சென்றதும் சடன் பிரேக் பிடித்ததால் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர்.

இந்நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வேகத்தடையை அகற்ற வேண்டும், அப்படி இல்லை என்றால் அதன் மீது வெள்ளை நிற வர்ணம் பூச வேண்டும் என்பதை வலியுறுத்தி வாகனங்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேகத்தடையின் மீது வர்ணம் பூசப்படும் என உறுதி அளித்தனர். அதன் பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply