பெண்களே உஷார்… கோலம் போடும்போது வேகமாக வந்த கார்… வசமாக சிக்கிய இளைஞன்…!!!

திருச்சி மாவட்டத்தில் விஷ்ணு என்ற இளைஞர் காரை திருடி வேகமாக ஓட்டிச் சென்ற போது அங்கிருந்த இளைஞர்கள் அவரைப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

திருச்சி மாவட்டம் உறையூர் குறத்தெரு பகுதிக்கு அருகில் உள்ள கீழ சாராய பட்டறை தெருவில் நேற்று அதிகாலை 5 மணிக்கு தங்களது வீட்டின் முன் பெண்கள் கோலமிட்டுக் கொண்டிருந்தனர். அச்சசமயம் திடீரென அதிவேகமாக கார் ஒன்று வந்தது. கோலமிட்டு கொண்டிருந்த பெண்கள் அனைவரும் காரின் வேகத்தை பார்த்து பயந்து வீட்டிற்குள் ஓடினர். அவ்வழியே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனங்களை அந்த கார் இடித்து,தள்ளி  விட்டு சென்றது.

இதையடுத்து அங்கே மிகவும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு இருந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வேகமாக சென்ற அந்த காரை விரட்டிப் பிடிக்க முயற்சி செய்தனர். பின்னால் பொதுமக்கள் வருவதை கண்ட அந்த காரை ஓட்டி சென்ற வாலிபன் சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓட முயற்சித்தார். ஆனால் அங்கிருந்த இளைஞர்கள் அவனை விரட்டிப் பிடித்து உறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்பு போலீசார் காரை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையின் போது காரை ஓட்டி வந்த வாலிபர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சேரன்குளம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவனின் பெயர் விஷ்ணு (19) என்பதும் தெரியவந்தது. அது மட்டுமின்றி அவன் ஓட்டி வந்த கார் திருட்டுக் கார் என்பதனையும் போலீசார் கண்டுபிடித்தனர். பிடிபட்ட அந்த காருக்குள் இன்னும் ஏழு கார் சாவிகள் இருந்தன. இதனால் சந்தேகமடைந்த போலீஸார் விஷ்ணு பிரபல கார் திருடனாக இருக்கலாம் என்று அவனிடம் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து விஷ்ணு ஓட்டி வந்த கார் திருச்சி கிராப்பட்டி ஆரோக்கிய நகரில் கார் ஒர்க்ஷாப் நடத்தி வரும் மாணிக்கவாசகம் எனும் நபருக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. வொர்க் ஷாப் முன் அந்தக் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனை விஷ்ணு திருடி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் விஷ்ணுவின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.