பழமையான பீரங்கியை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ஊரின் மையப்பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த கோட்டை அமைந்துள்ளது. இந்த திருமயம் கோட்டை சுற்றுலாத்தலமாக உள்ளதால் பொதுமக்கள் அதிக பேர் அதனை பார்வையிட வருகை தருகின்றனர். இக்கோட்டையில் பழமையான 2 பீரங்கிகள் உள்ளன. இதில் ஒன்று மலையின் உச்சிக்கு செல்ல கூடிய படிக்கட்டுக்கு முன்பாகவும், மற்றொன்று மலையின் உச்சியிலும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த பீரங்கி ஒரு அடையாள சின்னமாக கோட்டையில் மலையின் உச்சியில் காணப்படுகின்றது. இந்த இடத்தில் இருந்து ஊரின் எழில்மிகு தோற்றத்தை நான்குபுறமும் கண்டு ரசிக்கலாம். அதோடு பொதுமக்கள் பலர் இதன் முன்பு நின்று கொண்டு செல்போனில் புகைப்படங்களும், வீடியோக்களும் எடுத்து மகிழ்வர்.
இந்நிலையில் மலையின் உச்சியிலுள்ள இதில் காதலர்கள் தங்களது பெயர்களை எழுதி கிறுக்கி வருவது தொடர்கதையாக உள்ளது. ஆகவே பழமையான இதன் மேல் எழுதவோ கிறுக்கவும் அனுமதிக்காத வகையில் தடுப்புகள் அமைத்து பாதுகாக்கவும், ஏற்கனவே எழுதப்பட்டுள்ள எழுத்துக்களை அழித்து விட்டு பராமரிக்க வேண்டும் எனவும், சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த திருமயம் கோட்டையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.