1852 ஆம் ஆண்டில் பிரான்சிஸ் என்ற ஒரு அமெரிக்க கண்டுபிடிப்பாளர் மூலம் தான் காகிதப் பை இயந்திரம் நிறுவப்பட்டது. பின்பு 1871 ஆம் ஆண்டில் மார்க்ரேட்நைட் என்பவர் மற்றொரு காகித பை இயந்திரத்தை வடிவமைத்தார். பின்னாளில் இவர் தான் மளிகை பையின் தாய் என்று போற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காகிதப் பையின் வளர்ச்சியை வீழ்த்தும் பொருட்கள் 1950 ளில் பிளாஸ்டிக் பைகளும் செய்யப்பட்டன. வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் விநியோகம் என பிளாஸ்டிக் மிக எளிமையானதாக இருந்ததை கண்ட வியாபாரிகள் முதல் பொதுமக்கள் வரை ஆபத்தை உணராமல் பிளாஸ்டிக் பைகளில் ஆர்வம் காட்டினர்.

இதனால் காகித பைகளின் உற்பத்தி குறைந்து பிளாஸ்டிக் பைகளின் மோகம் மக்களிடையே அதிகரித்தது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதை அறியாத மக்கள் பின்னாளில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு செய்து வருவது நிதர்சனமான உண்மை. காகித பைகளை பொருத்தவரையில் விரைவாக சிதையுறும் தன்மை கொண்டது. வேதியியல் பொருட்கள் அதிகம் கலக்கப்படாத ஒன்று. குறிப்பாக காகித பைகள் கடல்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்காது என்றும் இதனால் நிறைய நன்மைகள் உள்ளதாகவும் காகிதப்பை உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு முதல் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளுக்கு தமிழக அரசு தடை விதித்தும் பிளாஸ்டிக் உபயோகிப்பது குறைந்த பாடில்லை. மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் பிளாஸ்டிக் மூலமாகவே பொருட்களை விற்பனை செய்கின்றனர். அதற்கு தடை விதிக்காமல் சிறு வியாபாரிகளுக்கு மட்டும் பிளாஸ்டிக் தடை போடுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

காகிதப் பை உற்பத்தியை அரசே மேற்கொண்டு மலிவு விலையில் உற்பத்தி செய்து கொடுத்தால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பிளாஸ்டிக் பைகள் சிதைவதற்கு 400 முதல் 1000 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுவதை கருத்தில் கொண்டு உலக காகிதப் பை தினத்திலாவது பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்ப்போம் என்று உறுதி ஏற்போம்.