திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரி போலீஸ் சரகம் களத்தூரில் சுப்ரமணி – விஜயகுமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். விஜயகுமாரி களத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். பல வருடங்களாக இவர்கள் களத்தூரில் பண்டவயையாற்று கரையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அவரை தொடர்ந்து வீட்டிற்கு அருகில் மற்ற சிலரும் வீடு கட்டி குடியிருந்தனர். இந்நிலையில் ஆற்றின் கரையோரமாக அந்த இடம் இருப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணி துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக சம்பந்தப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடும் வழங்கப்பட்டது.
ஆனால் சுப்பிரமணி மட்டும் வீட்டை காலி செய்ய மறுத்துள்ளார். நேற்று பொதுப்பணித்துறை இன்ஜினியர் தங்கமுத்து தலைமையிலான ஊழியர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றபோது ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரி வீட்டில் இருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து வந்து உடலில் ஊற்றி மிரட்டியுள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் பொதுப்பணி துறை ஊழியர்களும் மண்ணெண்ணெய் பாட்டிலை விஜயகுமாரிடம் பறித்து அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரி உட்பட ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.