“இயற்கை முறையில் விதைப்போம் அறுப்போம்”… பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்த என்ஜினீயர்….!!

ஈரோடு மாவட்டத்தில் என்ஜினீயர் ஒருவர் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் பொறியியல் முடித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ள இவர் வார விடுமுறை தினத்தில் வயலுக்கு வந்து வேலை செய்து வந்தார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கும் வீட்டிலிருந்தே பணி செய்யும் கட்டாயமும் இவருக்கு விவசாயத்தில் மிகுந்த ஆர்வத்தை அதிகரித்துள்ளது. பணி நேரம் போக எஞ்சிய நேரத்தில் தனக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடியில் செந்தில்குமார்  இறங்கியுள்ளார். பயன்பாட்டில் இருந்து காணாமல் போன பாரம்பரிய நெல் ரகங்களை தேடிப்பிடித்து வாங்கி வந்து வயல்களில் பயிரிட்டுள்ளார்.

குறிப்பாக கருப்புகவுனி, வாசனை சீரகசம்பா, புத்தர் சாப்பிட்டதாக கூறப்படும் காளான் நமக்,கருடன் சம்பா, கருங்குருவை, இலுப்பைப்பூ சம்பா, தங்க சம்பா ,பூங்கார் மற்றும் ஆள் உயரத்திற்கு வளரும் மாப்பிள்ளை சம்பா என 15 வகையான நெல் ரகங்களை வயலில் பயிரிட்டுள்ளார். இதில் பெரும்பாலான நெல்  ரகங்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளன. இது குறித்து அவர் கூறியதாவது, சிறு வயதிலிருந்தே எனக்கு விவசாயம் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகமாக இருந்தது. விவசாயத்தை பற்றி கற்றுக்கொண்டேன். தற்போது காலமாற்றத்தால் அனைத்தும் மாறிவிட்டது.

நான் ஐடி துறையில் வேலை பார்த்திருந்தாலும் விவசாயத்தின் மீதான ஆர்வம் எனக்கு குறையவில்லை. மேலும் எனக்கு சொந்தமான நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். இப்போது கொரோனா ஊரடங்கினால் வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறேன். வேலை நேரம் போக மீதி நேரங்களில் விவசாயத்திற்காக நேரத்தை ஒதுக்கி உள்ளேன். இயற்கை முறையில் விதைப்போம் அறுப்போம் என்ற முறையில் எந்தவித பயிர் மேலாண்மையும் செய்யாமல் பயிர்களை விளைவித்து வருகிறேன்.

என்னை பார்த்து எனது நண்பர்களும் கிராமத்தினரும் பாரம்பரிய நெல் ரகங்களை வயல்களில் பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். விளைவித்த நெல்லை தனது தேவைக்குப் போக மற்றவர்களுக்கு விதை நெல்லாக கொடுத்து மீண்டும் பாரம்பரிய பயிர் ரகங்களை மீட்டு எடுக்க போகிறேன் என்று அவர் கூறினார். செந்தில்குமாரை  இயற்கை விவசாயிகள் பலர்  பாராட்டி வருகின்றனர். மேலும் மற்ற மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் இங்கு வந்து இவருடைய வயலை பார்வையிட்டு செல்கின்றனர். செந்தில்குமாரின் இச்செயல் இயற்கை ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *