இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகின்றது. பாலஸ்தீனத்தில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் கருதுகின்றது. இதனால் பாலஸ்தீனத்தின் மேற்கு பகுதியை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றது. இதற்கு பதிலடி தரும் விதமாக பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளும் அவ்வப்போது இஸ்ரேல் ராணுவ படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக ரமலான் மாதம் வருவதை முன்னிட்டு பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் அதிகாரிகள் இடையே எகிப்து நாட்டில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாலஸ்தீன போராளிகள் காரில் இருந்தபடி திடீரென இஸ்ரேல் ராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் இஸ்ரேல் ராணுவத்தினர் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.