நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை வெளிமாநில வாகனங்கள் தமிழகம் வர தடை – எல்லைகள் திடீர் மூடல்!

கொரோனா எதிரொலியாக நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை வெளிமாநில வாகனங்கள் தமிழகம் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில எல்லைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அம்புலன்ஸ், கேஸ் சிலிண்டர் ஏற்றிவரும் வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இறப்பு போன்ற காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகளின் இலகுரக வாகனங்கள் அனுமதிக்கப்படும். அத்தியாவசிய தேவைக்காக குறைந்த அளவு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும். அந்த பேருந்துகளும் நோய் தடுப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு அதில் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதுவரை இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை.இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இதேபோல தமிழகத்திலும் இந்த வைரசால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை நடத்தினார்.

காணொலி மூலம் நடைபெறும் ஆலோசனையில் தமிழக முதல்வர் பழனிசாமி உட்பட அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்ற நிலையில் நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை வெளிமாநில வாகனங்கள் தமிழகம் தமிழக அரசு தடை விதித்துள்ளது. முன்னதாக நாளை நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிறு இரவு 10 மணி வரை பயணிகள் ரயில் இயங்காது என்றும் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஞாயிறன்று அதிகாலை 4 மணி முதல் நிறுத்தப்படும் என்றும் பிடிஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.