ஆன்லைன் ரம்மி – மேலும் ஒருவர் தற்கொலை… தமிழகத்தில் பரபரப்பு சம்பவம்!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் குடும்பத்தாருடன் கூலி வேலை செய்வதற்காக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆண்டிக்காடு பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவரது ஒரே மகன் ரியாஸ்கான். இவர் 20 வயது இளைஞர். இவர் ஈரோட்டில் உள்ள தனியார் செல்போன் கடையில் தினசரி சம்பளத்திற்காக வேலை செய்து கொண்டு வருகிறார். இவர் அடிக்கடி வீட்டிலும், தான் பணிபுரியும் இடத்திலும் செல்போனில் பேசிக் கொண்டே இருந்துள்ளார். சந்தேகம் அடைந்த பெற்றோரும், உறவினர்களும் கேட்டபோது,  அவர் பேச மறுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை 8.40 மணியளவில் தனது நண்பருக்கு போன் செய்த,  ரியாஸ்கான் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், கடன் அதிகமாகி விட்டது. என்னால் கட்ட இயலவில்லை. இது மற்றவர்களுக்கு தெரிந்தால் அவமானம் எனக் கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்  உடனடியாக காவேரி பாலத்துக்கு வந்தபோது,  ரியாஸ்கானின் இருசக்கர வாகன மட்டும் பாலத்தின் மேல் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி இருந்த அவரது நண்பர் உடனடியாக குமாராபாளையம் தீயணைப்புப்படை மற்றும் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.சுமார் 3 மணி நேரம் தேடி ரியாஸ்கான் சடலம் மீட்கப்பட்டது. தொடர்ந்து இதுபோல் ரம்மி விளையாட்டு விளையாடியதால் இவர் தற்கொலை செய்து கொண்டதாக பள்ளிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.