தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்து கடந்த அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதன் பின் அமைந்த திமுக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்டம் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதாவிற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் அளித்தார். இதனை தொடர்ந்து அக்டோபர் 19-ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு தமிழக அரசு பதிலளித்தது. கடந்த சில மாதங்களாக மசோதாவில் கிடப்பில் போட்டு வைத்தனர். இந்நிலையில் ஆளுநர் கடந்த எட்டாம் தேதி மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார். இந்த மசோதாவை நிறைவேற்ற தமிழக அரசு சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என அவர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி கூறியதாவது, ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் இருக்கிறது. வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் மீண்டும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புவோம். இரண்டாவது முறையாக அனுப்பும்போது அதனை ஆளுநர் நிராகரிக்க வாய்ப்பில்லை என தெரிவித்தார்.
இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட மசோதாவிற்கு அரசியல் சட்டப்படி நிச்சயமாக ஆளுநர் ஒப்புதல் தருவார் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசி அவர் கூறியதாவது, எந்த சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினாரோ அதே மசோதாவை மீண்டும் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டு அவரது ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசன விதிப்படி இந்த முறை ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும் என கூறியுள்ளார்.