ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் பகுதியில் வள்ளியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டதால் வள்ளியம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வள்ளியம்மாள் துணி துவைப்பதற்காக அப்பகுதியில் உள்ள கிளியாற்றிற்கு சென்றுள்ளார். இதில் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் அந்த ஆற்றில் வெள்ளம் சென்று கொண்டிருந்தது. அப்போது வள்ளியம்மாள் எதிர்பாராதவிதமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் மதுராந்தகம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் கிடந்த மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.