உரிமத்தை புதுப்பிக்க லஞ்சம்…. உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நவாவூர் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் லாலிரோட்டில் இருக்கும் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்க்கும் வெங்கடேஷ் என்பவர் துரைசாமியின் கடையில் ஆய்வு நடத்திய போது கடையின் உரிமம் காலாவதியாகி இருப்பது தெரியவந்தது. இதனால் உரிமத்தை புதுப்பித்து தர வெங்கடேஷ் துரைசாமியிடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு துரைசாமி சம்மதிக்காததால் வெங்கடேஷ் இறுதியாக 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

அப்போது மறுநாள் பணத்தை தருவதாக துரைசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து துரைசாமி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை துரைசாமி வெங்கடேஷிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வெங்கடேஷை கையும், களவுமாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.